Skip to main content

கை அமைதிகள் - 3: வியாக்கியான, யோக, அர்த்த பதாக, திரிசூல ஹஸ்தங்கள்

வியாக்கியான ஹஸ்தம், யோக ஹஸ்தம், அர்த்த பதாக ஹஸ்தம், திரிசூல ஹஸ்தம் ஆகிய நான்கு கை அமைதிகளும் யோகம், ஞானம், தத்துவம் சார்ந்தவை.

வியாக்யான ஹஸ்தம்

அமைதி

வியாக்கியான ஹஸ்தம் அபய ஹஸ்தத்தைப் போன்றதே. அதே போன்று மார்பளவில் அமையும். வேறுபாடு என்னவெனில் 
  • கட்டை விரல் உள்ளங்கையில் இருந்து முன்னோக்கி நீண்டிருக்க
  • சுட்டுவிரல் வளைந்து அதன் நுனி கட்டை விரலின் நுனியைத் தொட்டு 
  • வளையம் போன்று அமையும்.
வியாக்யான ஹஸ்தம்

மாற்றுப் பெயர்கள்
  • சின் முத்திரை - (छिन्मुद्रा) - 
  • சந்தம்ச (सन्दंश) முத்திரை - சந்தம்சம் = இடுக்கி; கட்டை விரலும் சுட்டு விரலும் சேர்ந்து இடுக்கி போல அமைந்ததிருப்பதால் வந்த பெயர். 
  • ஞான முத்திரை 
  • பௌத்த கலை மரபில் விதர்க்க (वितर्क) முத்திரை என்று அழைக்கப்படுகிறது.  விதர்க்கம் = வி+தர்க்கம். 
கருத்து

வியாக்யான ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைக் கை.
வியாக்கியானம் = விளக்கம். 
ஞானாசிரியர் சீடர்களுக்கு தத்துவ விளக்கம் செய்வதைக் குறிக்கும். 
  • கட்டை விரல் - பரமாத்மா (பதி)
  • சுட்டு விரல் - ஜீவாத்மா (பசு)
  • நடு, அணி, சிறு விரல்கள் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் (பாசம்)
ஆகியவற்றைக் குறிக்கும். ஜீவாத்மா இயல்பாக மும்மலங்களுடன் சேர்ந்து உழலும் (பாசம்). அது அத்தளைகளில் இருந்து விலகி பரமாத்மாவை சரணடைதலே வீடுபேறு. இந்த தத்துவ ஞானத்தின் குறியீடே வியாக்கியான ஹஸ்தம்.

கரம்

வியாக்கியான ஹஸ்தம் வலது முன்கரத்தில் அமையும்.

படிமங்கள்
  • தட்சிணாமூர்த்தி படிமம் முதன்மை எடுத்துக்காட்டு. 
  • புத்தர்
  • நம்மாழ்வார், மாணிக்கவாசகர் முதலிய ஞானிகள்
வியாக்கியான ஹஸ்தம்
தட்சிணாமூர்த்தி, சிவபுரம்

வியாக்கியான ஹஸ்தம்
தட்சிணாமூர்த்தி, சிவபுரம்

வியாக்கியான ஹஸ்தம்
நம்மாழ்வார், நஞ்சன்கூடு, 11 ஆம் நூற்றாண்டு
பெங்களூரு அருங்காட்சியகம்
(அபய ஹஸ்தத்தைப் போலவே நடுவிரலின் நுனி முலைக்காம்பின் மட்டத்தில் அமைந்திருப்பதைக் காண்க)

விதர்க்க ஹஸ்தம்
அனுராதாபுரம், ஸ்ரீலங்கா, 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
(நன்றி: The Metropolitan Museum of Art, New York, open access under Creative Commons Zero (CC0))

வியாக்கியான ஹஸ்தத்தில் அக்கமாலை

வியாக்கியான ஹஸ்தம் பொதுவாக கருவி ஏந்தாத கை அமைதி. ஆனால், சில சிற்பங்களில் வியாக்கியான ஹஸ்தத்தில் இல் அக்கமாலை அமைவதுண்டு.

அக்கமாலையுடன் வியாக்கியான ஹஸ்தம்
தட்சிணாமூர்த்தி, செய்யாறு வேதபுரீசுவரர் கோயில்


செப்புப் படிமம்

வியாக்கியான ஹஸ்தம்
மாணிக்கவாசகர், செட்டிப்புலம், திருத்துறைபூண்டி வட்டம்
சென்னை அரசு அருங்காட்சியகம்
(படம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons)


யோக ஹஸ்தம்

யோக ஹஸ்தம் வியாக்கியான ஹஸ்தத்தின் அதே கை அமைதியைக் கொண்டது. வேறுபாடு என்ன என்றால் யோக ஹஸ்தத்தில் உள்ளங்கை உடலை நோக்கி உட்புறமாக இருக்குமாறு அமையும். 

வியாக்கியான யோக ஹஸ்தம்

கருத்து

யோகம் மனதை உட்புறமாக திருப்புதல். இதைக் குறிக்கும் கை அமைதி.

படிமங்கள்

யோக தட்சிணாமூர்த்தி.

யோக ஹஸ்தம்
அர்த்த யோகாசனத்தில் தட்சிணாமூர்த்தி
இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
தெய்வநாயகேசுவரர் கோயில்
படம் நன்றி:

யோக ஹஸ்தம்
திரிவிக்கிரமர், காஷிபுர் (உபி) 11 ஆம் நூ
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி


(குறிப்பு: யோக ஹஸ்தத்தை ஞான ஹஸ்தம் என்பாரும் உண்டு.)

இருகை ஞான முத்திரை

அமைதி

முதல் வகை

பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அடியவர்களின் படிமத்தில் இருகைகளிலும் ஞான முத்திரை இவ்வாறு அமையலாம். இது ஞான முத்திரை கொண்ட இரு கையைகளையும் அந்தந்த முழங்கால் முட்டிகளின்மீது மேல்நோக்கி இருக்குமாறு வைத்த அமைதி. 

அடியவர்கள் படிமத்தில் ஞான முத்திரை

சிவன்
சிவகிரி, விஜயபுரி (பீஜபூர்), கர்நாடகா
(படம் நன்றி: Sameerbca, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

இரண்டாம் வகை

முதல் வகையில் இருந்து சிறு வேறுபாடு உடையது. சுட்டுவிரல் மேலும் வளைந்து அதன் நுனி கட்டை விரலின் அடியை தொட்டுக் கொண்டிருப்பது. இது 'இறைவன் அடியைப் பற்றுதல்' என்ற கருத்தைக் குறிக்கும்.

அடியவர்கள் படிமத்தில் ஞான முத்திரை
இரண்டாம் வகை

அர்த்த பதாக ஹஸ்தமும் திரிசூல ஹஸ்தமும்

அமைதி
  • அர்த்த பதாக ஹஸ்தம்  - சுட்டு விரலையும் நடு விரலையும் நீட்டி, மோதிர விரலையும் சுண்டு விரலையும் மடக்கி, கையை செங்குத்தாக பிடித்த அமைதி.
  • திரிசூல ஹஸ்தம் - சுட்டு விரல், நடு விரல், மோதிர விரல் மூன்றையும் நீட்டி, சிறு விரலையும் பெரு விரலையும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு மடக்கி, கையை செங்குத்தாக பிடித்த அமைதி.
அர்த்த பதாக ஹஸ்தம்   -   திரிசூல ஹஸ்தம்

குறிப்பு
  • இவை இரண்டும் கருத்து ஒற்றைக் கை அமைதிகள்.
  • அர்த்த = அரை; பதாகம் = கொடி. நாட்டியக் கலையில் ஐந்துவிரல்களையும் ஒன்றாக சேர்த்து செங்குத்தாக பிடித்த முத்திரை பதாகம் (கொடி) எனப்படும் (அபய ஹஸ்தம் போல). இரண்டு விரல்கள் மடங்கியுள்ளதால் இது அர்த்த பதாகம் (அரைக் கொடி).
  • அர்த்த பதாக ஹஸ்தம், ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வேறானவை என்ற துவைதக் கருத்தை உணர்த்தும். 
  • திரிசூலம் = முத்தலை வேல்.
  • திரிசூல ஹஸ்தம் முப்பொருளை உணர்த்தும் கை அமைதி. எடுத்துக்காட்டாக - பசு, பதி, பாசம் என்னும் சைவ சித்தாந்தக் கருத்து. 
கரம்
  • இருவகை ஹஸ்தங்களும் வலது கையில் அமையும்,
படிமங்கள்
  • இருவகை ஹஸ்தங்களும் தெய்வங்களுக்குரியவை அல்ல. மனித ஞானாசிரியர் படிமங்களில் அமைபவை.
  • அர்த்த பதாக ஹஸ்தம் - துவைத தத்துவத்தின் முதலாசிரியரான மத்வரின் படிமத்தில் அமையும்.
  • திரிசூல ஹஸ்தம் - திருக்குறளின் அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலைக் குறிக்கும் முப்பால் முத்திரையாக திருவள்ளுவர் படிமத்தில் அமையும்.
அர்த்த பதாக ஹஸ்தம் - வலது கை
மத்வர்.
(commons.wikimedia.org இல் இருந்து)
(மத்வரின் படங்கள், சிற்பங்கள் அர்த்த பதாக ஹஸ்தத்திற்கு பதிலாக வியாக்கியான ஹஸ்தம் கொண்டு அமைவதும் உண்டு.)

திரிபதாக ஹஸ்தம் - வலது கை
அய்யன் திருவள்ளுவர், கன்னியாகுமரி
(நன்றி: Rengeshb, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)



நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • https://www.wisdomlib.org
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து 

Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...