எழிற்கைகள் எழிற்கைகள் கருவி ஏந்தாமல், பொதுவான கருத்து ஏதும் இல்லாமல் படிமத்தின் எழிலுக்காக அமையும் கை அமைதிகள். கஜ ஹஸ்தம், தண்ட ஹஸ்தம், டோல ஹஸ்தம், பிரசாரித ஹஸ்தம் ஆகிய நான்கு எழிற்கைகளும் மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தத்தின் கை அமைதியை கொண்டவையே. மேலும் நான்கும் முழங்கை வளையாமல் கையை நேராக வைத்தவை. அவ்வாறு நீண்ட கைகள் தோளில் இருந்து எந்தப் பக்கம் நீண்டுள்ளன என்பதில்தான் வேறுபாடு. தவிர அவை அமையும் படிம வகைகளும் வேறு. கஜ ஹஸ்தம் - உடலின் குறுக்கே எதிர் பக்கம் நீண்டது- நாட்டிய நிலை படிமங்களுக்கு உரியது. தண்ட ஹஸ்தம் - முன்னோக்கி நீண்டது - அமர்ந்த நிலை படிமங்களுக்கு உரியது. டோல ஹஸ்தம் - உடலின் பக்கத்தில் தொங்கி நின்றது - நின்ற நிலை பெண் படிமங்களுக்கு உரியது. பிரசாரித ஹஸ்தம் - பக்கவாட்டில் வெளிப் பக்கமாக நீண்டது- நாட்டிய நிலை படிமங்களுக்கு உரியது. கஜ ஹஸ்தம் - தண்ட ஹஸ்தம் - டோல ஹஸ்தம் - பிரசாரித ஹஸ்தம் கஜ ஹஸ்தம் அமைதி முழங்கையை மடிக்காமல், நேராக வைத்த கை உடலின் குறுக்கே எதிர்பக்கம் நோக்கி நீண்டு அமையும். மணிக்கட்டிலிருந்து பல்லவ ஹஸ்தமா...