Skip to main content

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள்

சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.
  • முழு உருவச் சிற்பம் (சித்திரம்) - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. 'பூர்ண சித்திரம்' என்றும் பெயருண்டு.
அர்த்தநாரி
சென்னை அருங்காட்சியகம்
நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons)


  • புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்) -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும்.
(சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம் 'சித்ராபாசம்' எனப்படும் . படம் என்றும் பெயர். கோட்டோவிய்ங்களாகவும், வண்ண ஓவியங்களாகவும் அமையும்.)

புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)

சித்ரார்த்தம் என்னும் புடைப்புச் சிற்பம் புடைப்பின் ஆழத்தைப் பொருத்து பொதுவாக மூவகைப்படும். 

தாழ் புடைப்புச் சிற்பம் (Low-relief or bas-relief) 
  • அவற்றைத் தாங்கும் பரப்புகளில் இருந்து சிறிதளவே புடைத்து நிற்கும். 
  • சிற்பத்தின் எந்தப் பகுதியும் முழுமையாக தனித்து இருக்காது. 
  • உருவங்கள் தட்டையாக்கப் பட்ட தன்மை கொண்டது.

தாழ் புடைப்புச் சிற்பம்
துர்க்கை - திருவண்ணாமலை அரசு அருங்காட்சியகம்
ஆரணியில் இருந்து வந்தது. பொ ஆ 8 ஆம் நூற்றாண்டு

தாழ் புடைப்புச் சிற்பம்
- கின்னரர்

உயர் புடைப்புச் சிற்பம் (High relief) 
  • சிற்பத்தின் பெரும்பகுதி அதைத் தாங்கும் பரப்பில் இருந்து புடைத்து நிற்கும். 
  • சிற்பத்தின் சில பகுதிகள் தாங்கும் பரப்பில் இருந்து முழுமையாக தனித்து இருக்கலாம். 
  • உருவங்கள் தட்டையாக்கப் படாமல் முழுமையாக இருக்கும்.

உயர் புடைப்புச் சிற்பம்
துர்க்கை - வளைகாப்பு மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

உயர் புடைப்புச் சிற்பம்
சிங்கத்தின் கால் ஒன்று தூணில் இருந்து முழுமையாக தனித்து உள்ளது.

இடை புடைப்புச் சிற்பம் (Mid relief or Half relief relief)
  • மேல் இரண்டு வகைகளுக்கு இடைப்பட்டது.
  • இதை தனி வகையாகக் கருதாமல் தாழ் புடைப்பு வகையிலேயே சேர்ப்பதும் உண்டு.
  • சிற்பத்தின் முன் பாதிப் பகுதி அதைத் தாங்கும் பரப்பில் இருந்து புடைத்து நிற்கும். 
  • சிற்பத்தின் எந்தப் பகுதியும் தாங்கும் பரப்பில் இருந்து முழுமையாக தனித்து இருக்காது. 
  • உருவங்களின் உண்மை ஆழம் திரிந்திருக்கலாம்.
இடை புடைப்புச் சிற்பம் (Mid relief or Half relief relief)
அகலிகை தீச்சொல் மீட்பு
ராமசாமி கோயில், குடந்தை
ராமன், விஸ்வாமித்திரர் வலது முன் கைகளின் நீளங்கள் மிகவும் குறைந்திருப்பதைக் காண்க. 

தெய்வச் சிற்பங்கள்

உருவ வகைப்பாடு

உருவத்தைப் பொருத்து தெய்வப் படிமங்கள் மூவகைப்படும்.
  • அருவம் - தலை, உடல், கைகால்கள் முதலிய உறுப்புகள் எதுவும் இல்லாத வடிவம்
  • உருவம் - தலை, உடல், கைகால்கள் முதலிய உறுப்புகள் பொருந்தி கட்புலனாகும் வடிவம்
  • அருவுருவம் - அருவம் உருவம் இறண்டும் கலந்த வடிவம்
எடுத்துக்காட்டு
  • அருவம் - (அவ்வியக்தம், நிஷ்களம்)  - சிவலிங்கம், பாண உமை, சாளாக்கிரமம், பாணலிங்கம்
  • உருவம் - (வியக்தம், சகளம்) - சந்திரசேகரர்
  • அருவுருவம் - (வியக்தாவியக்தம், சகள நிஷ்களம்) - முகலிங்கம், லிங்கோத்பவர்
அருவம் - பாண லிங்கங்கள்
(நன்றி: சிவ சாஹில், CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

உருவம்
நடராஜர் - Los Angeles County Museum of Art 
(நன்றி: By Shiva_as_the_Lord_of_Dance_LACMA.jpg, photographed by the LACMA.derivative work: Julia\talk, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=14771931)

அருவுருவம்
நான்முக லிங்கம், அண்ணாமலையார் கோயில்,
திருவண்ணாமலை


நகர்வு வகைப்பாடு

நகரும் தன்மையைப் பொருத்து தெய்வப் படிமங்கள் மூவகைப்படும்.

1. அசலம் 

நகராத சிற்பங்கள். 
  • நகர்த்த இயலாதவை - பாறை சிற்பங்கள், சுதை வடிவங்கள்; 
  • நகர்த்தக் கூடாதவை - நிலையாக நிறுவப்பட்டவை (பிரதிஷ்டை செய்யப்பட்டவை.)
அசல சிற்பம் - துர்க்கை - பாறை
மாமல்லபுரம் திரௌபதி ரதம்

நிலையாக நிறுத்தப்பட்டது (பிரதிஷ்டை)
லக்ஷ்மி நாராயணர்
செஞ்சி பனம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்

2. சலம் 

நகரும் சிற்பங்கள். 
  • நகரக் கூடியவை - செப்புப் படிமங்கள். கருங்கல், தாதுப் பொருட்கள், உலோகங்கள், ரத்தினங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டவை
  • நகர்வதற்காக அமைந்தவை - உற்சவ மூர்த்திகள்
லிங்காயத்துகள் கழுத்தில் அணியும் இஷ்ட லிங்கம் (பாண லிங்கம்)  

துர்க்கை - எசாலம்

3. சலாசலம்
  • நகர்தல், நகாராதிருத்தல் இரு இயல்புகளும் உடையவை
  • பொதுவாக ஒரிடத்தில் நிலைத்து இருப்பவை. ஆயினும், அபூர்வமாக நகர்பவை.  
  • எடுத்துக்காட்டு: நடராஜர் செப்புப் படிமம், பூரி ஜகன்னாதர் கோயில் மூலவர்கள்.
பலபத்ரர், சுபத்ரா, ஜகன்னாதர் - புவனேஸ்வர்
இவை மூலவர்களாகவும், ரத யாத்திரையின் போது உற்சவர்களாகவும் செயல்படும்.
 (படம் நன்றி: Krupasindhu Muduli, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)

இயல்புகளின் அடிப்படையில் வகைப்பாடு

சிற்பங்கள் அவற்றின் இயல்புகளின் அடிப்படையில் மூவகைப்படும்.

சாத்வீகப் படிமம் (யோக மூர்த்தி)
  • யோக, அபய. வரத ஹஸ்தங்கள்
  • இயற்கையான சாந்த நிலை, முகபாவம்
  • எடுத்துக்காட்டு: தட்சிணாமூர்த்தி
சாத்வீக படிமம்
தட்சிணாமூர்த்தி, சிவபுரம்

ராஜசப் படிமம்  (போக மூர்த்தி)
  • நின்ற கோலம் / ஊர்தியில் அமர்ந்த கோலம்
  • அபய வரத ஹஸ்தங்கள்
ராஜச படிமம்
நான்முகன், சிவபுரம்

தாமசப் படிமம் (வீர, உக்ர, ரௌத்ர மூர்த்திகள்)
  • அச்சுறுத்தும் தோற்றம்
  • அதிகமான கைகள். அவற்றில் வில், வாள் முதலிய போர் ஆயுதங்களை ஏந்திய கோலம்
  • கோரைப் பற்கள், வெறித்த கண்கள் இருக்கலாம்.
  • ஜ்வாலா மகுடம், முண்ட மாலை ஆகிய அணிகள் இருக்கலாம்.
  • எடுத்துக்காட்டு: மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர், பரசுராமர், கஜசம்ஹார மூர்த்தி போன்ற சிவனின் சம்ஹார கோலங்கள்
சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார்
அஷ்டலக்ஷ்மி கோயில், சென்னை

இயல்புகளின் அடிப்படையில் வழிபடு படிமங்களை இருவகையாகப் பிரிப்பதும் உண்டு.
  • சௌம்ய/ சாந்த - (அமைதியான) - சாத்வீக, ராஜசப் படிமங்கள் இவ்வகையில் வரும்.
  • ரௌத்ர/ உக்ர - தாம்ச படிமங்கள் இவ்வகையில் வரும். 
மக்கள் அவரவர் தேவைக்கேற்ப இயல்புடைய தெய்வப் படிமங்களை வணங்குவர். 

வழிபடு மூர்த்தங்களின் வகைப்பாடு

கோயில்களில் வழிபடு மூர்த்தங்கள் மூவகைப்படும்.

1. மூல மூர்த்தங்கள்
  
  • மூலக் கருவறையில் வீற்றிருப்பவை. 
  • பொதுவாக நிலையாக நிறுவப்பட்ட அசலச் சிற்பங்கள்.
  • கல், மரம், சுதை ஆகியவற்றால் ஆனவை.
  • மாற்றுப் பெயர்கள் - மூலவர், மூலப் படிமம், மூல விக்ரஹம், மூல பிம்பம், மூல பேரம், துருவ பேரம் (வட மொழி  (ध्रुवबेर): த்ருவ = நிலைத்த, பேர - படிமம்).
  • கருவறை விமானம் மற்றும் மூலவரின் அளவுகள் தொடர்புடையவை. மூலவரின் அளவுகளின்படி விமானம் அமைக்கப்படும் அல்லது விமானத்தின் அளவுகளின்படி மூலவர் நிறுவப்படுவார்.
மூல மூர்த்தங்கள் மூவகைப்படும்.
  • நின்ற நிலை (ஸ்தானகம்)
  • அமர்ந்த நிலை (ஆசனம்)
  • கிடந்த நிலை (சயனம்)
கிடந்த நிலை திருமாலுக்கு மட்டுமே உரித்தான வகை ஆகும். இந்த மூன்று நிலைகள் சிற்பங்களின் பொதுவான வகைப்பாடும் ஆகும்.

2. பரிவார மூர்த்தங்கள் 
  • மூலக் கருவறையைச் சுற்றி அமைந்திருப்பவை.
3. உற்சவ மூர்த்தங்கள்
  • வெவ்வேறு சடங்குகளுக்காக கருவறை தெய்வத்தின் பதிலிகளாக செயல்படும் மூர்த்தங்கள்.
  • பொதுவாகச் செப்புப் படிமங்கள்.
  • நகரும் தேவையும் தன்மையும் கொண்ட சல சிற்பங்கள்.
  • இவை பதிலிகள்தனே ஒழிய பிரதிகள் அல்ல. உற்சவ மூர்த்தங்களின் வடிவம் மூலவரின் வடிவத்தில் இருந்து மாறுபடும். சிவன் கோயிலில் லிங்க வடிவம் உற்சவ வடிவமாவதில்லை. உற்சவர்கள் சந்திரசேகரர், அர்த்தநாரி போன்ற உருவ வடிவங்களே. திருமால் கோயில்களில் மூலவர் நின்ற, அமர்ந்த, கிடந்த ஆகிய மூவகை நிலைகள் எதில் இருந்தாலும், உற்சவர்கள் நின்ற நிலையில்தான் இருப்பர்.
  • சிவன் கோயில்களில் உற்சவருக்கும் மூலவரின் பெயர்தான். தனிப்பெயர் இல்லை. திருமால் கோயில்களில் உற்சவர் தனிப் பெயர் கொள்வது உண்டு. எடுத்துக்காட்டு: திருவரங்கத்தில் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள்.
பஞ்ச பேரம்

வைணவத்தில் குறிப்பாக வைகாசன ஆகம வழிபாட்டு முறையில் கருவறையில் ஐந்து படிமங்கள் மூலவர் + 4 வகை உற்சவ மூர்த்தங்கள் இருப்பர். இந்த ஐந்து வகை பேரங்கள் 'பஞ்ச பேரங்கள்' எனப்படும். 'பேரம்',  'அர்ச்சை' ஆகிய சொற்கள் உருவம், விக்கிரகம் எனப் பொருள் கொண்டவை.
  • துருவ பேரம் - மூலவர்.  துருவ பேரம் நகராதது (அசலம்) ஆதலால் பல்வகை சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றிற்காக இவை மூல இறைவனின் பதிலிகளாக கீழ்கண்ட பேரங்கள் அருள் பாலிக்கின்றன. 
  • கௌதுக பேரம் - (कौतुकबेर; கௌதுக = திருவிழா) - (கர்மார்ச்சைதினசரி சடங்குகளை ஏற்றுக்கொள்ளும் படிமம். இது மரம், கல், செம்பு, வெள்ளி, தங்கம், ரத்தினங்கள் ஆகியவற்றால் செய்யப்படலாம்என்றும்  செய்யப்படும் பொருளுக்கேற்ப நன்மை வழங்கும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. 
  • பலி பேரம் (बलिबेर) - (பலியார்ச்சை) கோயிலின் பலி பீடத்தில் வழங்கப்படும் 'பலி' என்னும் படையலை ஏற்றுக்கொள்வதற்காக உள்ள படிமம். இவை உலோகப் படிமங்கள்.
  • உற்சவ பேரம் (उत्सवबेर) - (உத்ஸவார்ச்சை) உற்சவங்களின்போது வலம் வரும் படிமங்கள். இவை நகரும் (சல) வகை உலோகப் படிமங்கள். 
  • ஸ்னப்ன பேரம் (स्नपनबेर; ஸ்னப்ன = நீராட்டு) (ஸ்நானார்ச்சை) - திருமஞ்சனம் (அபிஷேகம்) என்னும் நீராட்டுச் சடங்கை ஏற்றுக்கொள்வதற்காக உள்ள படிமம். இவை நகரும் (சல) வகை உலோகப் படிமங்கள். 
பஞ்ச பேரர்களும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள்தான். கௌதுக, உற்சவ, பலி, ஸ்னப்ன பேரங்கள் துருவ பேரத்தின் அம்சங்களே. மூலவரான துருவ பேரத்தில் இருந்துதான் அவை சக்தியைப் பெருகின்றன. என்றாலும் ஒவ்வொன்றும் தனிப் பெயர் கொண்டு விளங்கும்.

எடுத்துக்காட்டு:

திருமலை வேங்கடேசப் பெருமாள் கோயில் கருவறையில் பஞ்ச பேரங்கள்
1, துருவ பேரம் - வெங்கடேசப் பெருமாள்
2. கௌதுக பேரம் -  வெள்ளி. போக ஸ்ரீனிவாச மூர்த்தி / மணவாளப் பெருமாள் - வெள்ளியால் ஆனது. வெள்ளிக் கிழமை தவிர மற்ற தினங்களில் அபிஷேக, ஆராதனைகள் இவருக்கே. ஏகாந்த சேவையில் உறங்குபவரும் இவரே.
3. பலி பேரம் - பஞ்ச லோகம் கொலுவு ஸ்ரீனிவாச மூர்த்தி
4. உற்சவ பேரம் -   மலையப்ப சாமி
5. ஸ்னப்ன பேரம் -  உக்ர ஸ்ரீனிவாச மூர்த்தி
(மூலப் படம் - இணையத்தில் இருந்து)

உலோகப் படிமங்களை செப்பு, பஞ்சலோகம், பொன், வெள்ளி முதலிய உலோகங்களால் செய்யலாம்.

ஒரு கோயிலில் எத்தனை வகை பேரங்கள் உள்ளன என்பதைப் பொருத்து கோயிலை வகைபடுத்துவதும் உண்டு.
  • உத்தமம்  - பஞ்ச பேரங்களையும் உடைய கோயில் 
  • மத்தியமம்  - துருவ, கௌதுக, பலி ஆகிய மூன்று பேரங்களை மட்டும் உடைய கோயில் 
  • அதமம் - துருவ, கௌதுக ஆகிய இரு பேரங்களை மட்டும் உடைய கோயில் என்றும் கருதப்படும்.
பஞ்ச பேரங்களை பஞ்சாக்கினி, உடலின் பஞ்ச வாயுக்கள், பஞ்ச பூதங்கள் ஆகிய பஞ்ச தத்துவங்களுடன் ஒப்பிடுவர்.

மேற்கண்ட நான்கு உற்சவ படிமங்களோடு தீர்த்தவாரிக்கு உரியதாக 'தீர்த்தார்ச்சை', உறக்கத்திற்கு உரியதாக 'சயனார்ச்சை' ஆகியவற்றையும் சேர்த்து ஆறு உற்சவ படிமங்கள் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சயனார்ச்சை அல்லது சயன பேரம் சிவன் கோயில்களில் இரவு பள்ளியறைக்கு எழுந்தருளும் வடிவம் ஆகும்.

உத்தமம், மத்தியமம், அதமம் 

உத்தமம், மத்தியமம், அதமம் என்னும் பாகுபாடு சிற்பத்தின் எளிமை அல்லது சிக்கலான தன்மையை குறிப்பிடுவதாகும். எ-கா: நின்ற நிலை திருமால் எளிய அதம படிமம், கங்காதரர் மத்தியம படிமம், ரங்கநாதர் உத்தம படிமம் (இறைவன், துணைவி, ஆயுதங்கள், தேவர்கள், முனிவர்கள்)

சிற்பப் பொருள்கள்

பத்து வகையான மூலப் பொருள்களைக் கொண்டு சிற்பங்களைச் செய்யலாம் எனத் திவாகர நிகண்டு கூறுகிறது.

“கல்லும், உலோகமும், செங்கலும், மரமும்,
மண்ணும், சுதையும், தந்தமும், வண்ணமும்,
கண்ட சருக்கரையும், மெழுகும், என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பாவன.”

(மண் = களிமண்; சுடுமண் = செங்கல்; சுதை = சுண்ணாம்பு; கண்ட சருக்கரை = கடுசர்க்கரை,சுக்கான்; வண்ணம் = பல்வகை நிறச் சாந்து)

இதில் வழிபடு சிற்பங்களை தந்தம், மெழுகைத் தவிர்த்த மற்ற பொருட்களால் செய்யலாம். இந்த பொருட்களில் களிமண்ணை விட செங்கல் உயர்ந்தது. செங்கல் < சுதை < கடு சர்க்கரை < மரம் < கல் < உலோகம் < வண்ணம். உலோகங்களில் தாமிரத்தைவிட வெள்ளியும், வெள்ளியைவிட தங்கமும் வழிபடு சிற்பங்களை செய்ய உயர்ந்தவை. இவற்றைத் தவிர ரத்தினங்களாலும் செய்யலாம்; அனைத்திலும் உயர்ந்தது. 

எடுத்துக்காட்டுகள்:

பெரும்பாலான வழிபடு சிற்பங்கள் கல்லாலானவை.

உற்சவ மூர்த்திகள் பொதுவாக பஞ்சலோக உலோகத்தால் ஆனவை. சிங்கனல்லூர் சிதம்பரம் ஆகிய இடங்களில் மூலவரே உலோகத்தால் ஆனவர்.

அரிதாக மணலால் ஆன லிங்கங்கள் உண்டு. எ-கா: ராமேஸ்வரம் ராமநாதர்; கும்பகோணம் கும்பேஸ்வரர்; காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்

ஸ்படிகங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. எ-கா:  சிதம்பரம்

மரத்தால் ஆன உலகளந்தப் பெருமாள்
திருக்கோயிலூர்

சுதைச் சிற்பம் - திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்
(படம் நன்றி: temple.dinamalar.com)

திருவரங்கம், சமயபுரம், அழகர் கோயில், சீர்காழி தோணியப்பர், மதுரை கூடல் அழகர் கோயில், திருத்தங்கல், காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப் பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் வண்ணம் தீட்டப்பட்ட சுதைச் சிற்பங்கள் உள்ளன. திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ அழிக்கப்படுகின்றன. 

அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்படுகின்றன.

கடு சர்க்கரைச் சிற்பம் - திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள்
(படம் நன்றி: temple.dinamalar.com)

காவி மண், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய் ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு பாகம், கோழிப் பரல் (ஆற்று மணலில் கிடைக்கும் ஒருபொருள்) பத்துப் பாகம், இவை அனைத்தும் சேர்த்து எவ்வளவு எடை உள்ளதோ அதே அளவு செஞ்சல்யம் (சிவப்பு நிறப் பொருள்) இவற்றை நன்றாகப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கினால் கிடைக்கும் கலவையே கடு சர்க்கரை. 22 அடி நீள திருவட்டாறு ஆதி கேசவப் பெருமாள், சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் கோயிலில் உள்ள திருவேங்கட விண்ணவர் எம்பெருமான் சிலை ஆகியவை கடு சர்க்கரையால் ஆனவை.

தவிர வீரம், பூரம், பாதரசம், ரசக்கற்பூரம், லிங்கம், மனோசிலை, கந்தகம், கார்முகில், தாழகம் ஆகியவற்றைக் கலந்து தயாரித்த நவ பாஷாணக் (ஒன்பது விஷம்) கலவையால் பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையையும், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்த நாரீசுவரர் சிலையையும்  உருவாக்கியுள்ளனர்.

உயரத்தின் அடிப்படையில் வகைப்பாடு

சிற்பங்கள் அவற்றின் அளவு முறையின் அடிப்படையில் மூவகைப்படும்.
  • வாமனம் - 7 தாள அளவு
  • மானுடம் - 8 தாள் அளவு
  • தெய்விகம் - 9 தாள அளவு

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • கோ. திருஞானம்; உருவக்கோடுகள்; 1998
  • How to See a Museum - Participant Handbook; Tamil Heritage Trust
  • https://www.wisdomlib.org/definition/bera
  • பேரா. சுந்தரசண்முகனார்; தமிழ் அகராதிக் கலை; புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பக வெளியீடு; 1965
  • temple.dinamalar.com







Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...