Skip to main content

கை அமைதிகள் - 2: அபய, வரத, தாடன, நித்ரா ஹஸ்தங்கள்

அபய ஹஸ்தம், வரத அஸ்தம், தாடன ஹஸ்தம், நித்ரா ஹஸ்தம் ஆகிய நான்கு ஹஸ்த வகைகளும் ஓரே கை அமைதியை அடிப்படையாகக் கொண்டவை. அந்த கை அமைதி பிடிக்கப்படும் விதத்தில்தான் வேறுபடுகின்றன.

அபய ஹஸ்தம் (காக்கும் கை) - வரத ஹஸ்தம் (வழங்கும் கை)

அமைதி

இந்த இருவகை கை அமைதிகள் 
  • ஐந்து விரல்களையும் நீட்டி,
  • ஒன்றோடொன்று ஒட்டி அமைத்து,
  • உள்ளங்கை வெளிநோக்கி இருக்குமாறு அமையும். 
அபய ஹஸ்தத்தில் விரல்கள் மேல்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி பொதுவாக முலைக்காம்பின் மட்டத்தில் அமையும்.

அபய ஹஸ்தத்தில் உள்ள கையை கீழ் நோக்கி திருப்பினால் கிடைக்கும் அமைதி வரத ஹஸ்தம். விரல்கள் கீழ்நோக்கி இருக்கும். நடுவிரலின் நுனி  ஆசன வாய் மட்டத்தில் அமையும். 

அபய ஹஸ்தம் (வலதுகை)

வரத ஹஸ்தம் (இடது கை)

குறிப்பு

இவை கருத்து ஒற்றைக் கை அமைதிகள்.

அபயம் = அ+ பயம் = அச்சமின்மை. அபய ஹஸ்தம் என்னும் காக்கும் கை தன்னில் தஞ்சமடைந்தோர்க்கு 'அஞ்சற்க. யாமிருக்க பயமேன்' என்ற குறிப்பை உணர்த்துகிறது.

அபய ஹஸ்த கை அமைதி நாட்டியத்தில் 'பதாகம்' (கொடி) என்று அழைக்கப்படுகிறது.

வரதம் = வரமளிப்பது. 'அடியவர்கள் கேட்டதை வழங்குவேன்' என்னும் குறிப்பை உணர்த்துவது.

ஒரு இறை படிமத்தில் அபய ஹஸ்தமோ, வரத ஹஸ்தமோ அல்லது இரண்டுமோ இருந்தால் அது சாத்வீக நிலையைக் குறிக்கும்.

கரம்
  • அபய , வரத ஹஸ்தங்கள் இரண்டுமே முன்கைகளில் மட்டுமே அமைபவை.
  • ஒரு படிமத்தில் அபய , வரத ஹஸ்தங்கள் இரண்டுமே இருக்கும்போது வலது முன் கை அபய ஹஸ்தமும், இடது முன் கை வரத ஹஸ்தமும் காட்டும் . 

வலது முன்கை அபய ஹஸ்தம், இடது முன்கை வரத ஹஸ்தம்
திருமகள், 18 ஆம் நூற்றாண்டு, பெங்களூர்
பெங்களூரு அருங்காட்சியகம்
(அபய ஹஸ்தத்தின் நடு விரல் நுனி முலைக்காம்பின் மட்டத்தில் இருப்பதைக் காண்க)
(நன்றி: Ananth subray, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)
  • அபய ஹஸ்தம் பொதுவாக வலது முன் கையில் மட்டுமே அமைவது.
  • வலது முன் கை அபய ஹஸ்தம் காட்டும்போது இடது முன்கை இடுப்பில் அல்லது தொடையில் வைக்கப்பட்டிருக்கலாம்.  கடகம் போன்ற வேறு கை அமைதியும் இருக்கலாம்.
வலது முன்கை அபய ஹஸ்தம் (காக்கும் கை)
இடது கை இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பிரம்மா, எசாலம் ராமநாதீசுவரர் கோயில்

வரத ஹஸ்தம் வலது முன் கையிலும் தனித்து அமையலாம். எடுத்துக்காட்டு; வெங்கடேசப் பெருமாள்

வலது கை வரத ஹஸ்தம்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், குண்சீலம்
(நன்றி: vikatan_2021-09)

அபயமோ, வரதமோ பொதுவாக தனித்து இடது முன்கையில் அமைவதில்லை. (அரிதாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் 'அர்ஜுனன் தபசு' சிற்பத் தொகுதியில் சிவனின் இடது கை தனித்த வரத ஹஸ்தமாக அமைந்துள்ளது.)

அபய ஹஸ்தம் செங்குத்தாக இல்லாமல் சற்று வெளிப்புறம் சாய்ந்தும் காணப்படுவதுண்டு, இது விரைப்பானபடிமத்திற்கு நெகிழ்வுத் தன்மையையும், எழிலையும் அளிக்கிறது.

சற்று வெளிப்புரமாக சாய்ந்த அபய ஹஸ்தம்
(படம் நன்றி: Jagadeeswaran Natarajan, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

சற்று வெளிப்புறமாக சாய்ந்த அபய ஹஸ்தம்
தோள் வரை உயர்ந்துள்ளது.
திருமால், ஜலநாதீசுவரர் கோயில், தக்கோலம்

அபய ஹஸ்தத்தில் நடுவிரலின் நுனி  முலைக்காம்பின் மட்டத்தில் அமையும் என்பது பொது விதி. ஆயினும்  மேற்கண்ட திருமால் சிற்பத்தில் உள்ளது போல சில படிமங்களில் தோள் வரை உயர்த்தப்பட்டு இருப்பதும் உண்டு. நடராஜர் படிமங்களில் அபய ஹஸ்தம் காட்டும் வலதுகை உடலை விட்டு விலகி தோள் வரை உயர்ந்திருக்கலாம். புத்தர் படிமங்களிலும் அபய ஹஸ்தம் தோள்வரை உயர்ந்திருக்கலாம்.

தோள் வரை உயர்த்திய அபய ஹஸ்தத்துடன் புத்தர்
காந்தாரக் கலை குஷானர்கள் பொ.யு 2-3 ஆம் நூ
(© The Trustees of the British Museum; CC BY-NC-SA 4.0 license)

செப்புப் படிமங்களில் அபய, வரத ஹஸ்தங்கள்

கல் படிமங்களில் ஐந்து விரல்களும் சம மட்டத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருக்க, செப்பு படிமத்தில் கீழ்கண்ட மாறுதல்கள் காணப்படும்.
  • கட்டை விரல் உள்ளங்கை மட்டத்தில் இருந்து சற்று முன் தள்ளியும், அதன் தலை உள்ளங்கையை நோக்கி சற்று வளைந்தும் இருக்கும்.
  • சுட்டு விரலும், சிறு விரலும் சற்று பின்னடங்கியும், சிறிது வளைந்தும் காணப்படும்.
செப்பு படிமத்தில் அபய ஹஸ்தம் - உடலை விட்டு விலகியும் தோள்வரை உயர்ந்தும் உள்ளது.
நடராஜர், தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகம்
(படம் நன்றி: Richard Mortel from Riyadh, Saudi Arabia, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons)

செப்புப் படிமத்தில் அபய ஹஸ்தம்

தாடன ஹஸ்தம்

தாடன ஹஸ்தம்
அமைதி

இது அபய ஹஸ்த கை அமைதிக்கு நெருக்கமானது.
  • கை விரல்கள் நீட்டியிருக்கும்.
  • கட்டை விரல் தவிர்த்த மற்ற நான்கு ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும்  அல்லது சற்றே விலகியிருக்கும்.
  • உள்ளங்கை வெளி நோக்கி இருக்கும்
இரு வேறுபாடுகள் உண்டு
  1. கட்டை விரல் கை மட்டத்தில், கையில் இருந்து விலகி, அகல விரித்து, சற்று பின்னோக்கி இருக்கும். (அபய ஹஸ்தத்தில் கட்டை விரல் மற்ற விரல்களோடு ஒட்டியோ அருகிலோ இருக்கும்.
  2. அபய ஹஸ்தம் மார்பு மட்டத்தில் இருக்கும். தாடன ஹஸ்தம் கையை மேலே தலை மட்டத்திற்கு உயர்த்திய நிலையில் இருக்கும்.
குறிப்பு
  • இது ஒரு கருத்து ஒற்றைக் கை அமைதி.
  • தாடனம் = அடித்தல். அடிப்பதற்காக கையை ஓங்குவது தாடன ஹஸ்தத்தின் அமைதி.  நெறிகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது இதன் குறிப்பு. 

கரம்
  • வலது பின்கரத்தில் காணப்படும்.
படிமங்கள்
  • வதம் செய்யும் இறை படிமங்களில் இந்த ஹஸ்தம் பொதுவாகக் காணப்படும்.
தாடன ஹஸ்தம்
இரண்யனை வதம் செய்யும் ஆளறி
பிரம்ம தீர்த்த மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

தாடன ஹஸ்தம்
இரண்யனை வதம் செய்யும் ஆளறி, திருக்கண்ணமங்கை

தாடன ஹஸ்தம்
அனுமன், யோக ராமர் கோயில், நெடுங்குணம்


நித்ரா ஹஸ்தம்

அமைதி
  • நித்ரா ஹஸ்தம் இருக்கையில் கையை ஊன்றிய அமைதி.
  • அபய முத்திரையில் அமைந்த கையை இருக்கையில் படுக்கையாக வைத்த நிலை. (அபய முத்திரையைப் போலவே நடுவிரலும், மோதிர விரலும் இருக்கையில் நன்கு படிந்திருக்க, சுட்டு விரலும் சுண்டு விரலும் இருக்கையில் இருந்து சற்று விலகி வளைந்திருக்கும்.)
நித்ரா ஹஸ்தம்
குறிப்பு
  • இது ஒரு கருத்து ஒற்றைக் கை அமைதி.
  • நித்ரா = நித்திரை, தூக்கம். உறக்க நிலையை உணர்த்துவதால் இப்பெயர்.
மாற்றுப் பெயர்
  • நித்ராதா ஹஸ்தம்
கரம்
  • இடது அல்லது வலது முன் கரத்தில் அமையும்
படிமங்கள்
  • சோமாஸ்கந்தர் படிமத்தில் உமையின் இடது கை நித்ரா ஹஸ்தத்தில் அமையும்.
  • உத்குடிகாசனம், மகராஜ லீலாசனம் ஆகிய அமர்வு வகைகளில் ஒரு உழங்கை ஆசனத்தின் மீது குத்தி வைத்த முழங்காலின் மீது இருக்க மற்ற முன்கை ஆசனத்தின் மீது நித்ரா ஹஸ்தமாய் ஊன்றி அமையலாம். எடுத்துக்காட்டு: பரமபதநாதர் (திருமால்), ஐயனார்.
நித்ரா ஹஸ்தம் - இடது கை
பார்வதி, தஞ்சாவூர் அருங்காட்சியகம்
(நன்றி: Jean-Pierre Dalbéra from Paris, France, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons)

நித்ரா ஹஸ்தம் - பார்வதியின் இடது கை
சோமாஸ்கந்தர், கடற்கரைக் கோயில், மஹாபலிபுரம்

நித்ரா ஹஸ்தம் - வலது கை, உத்குடிகாசனம்
பரமபதநாதன், செஞ்சி பனம்பாக்கம்

நித்ரா ஹஸ்தம் - இடது கை; உத்குடிகாசனம்
ஐயனார், எசாலம்

நித்ரா ஹஸ்தம் - இடது கை, மகராஜ லீலாசனம்
சிம்மநாத அவலோகிதேஸ்வரர்
திபெத்திய பௌத்த படிமம், 11 ஆம் நூற்றாண்டு
(நன்றி: https://www.himalayanart.org/items/12481)

துவாரபாலகர் சிற்பங்களில் 'அபய ஹஸ்தம்'

சில துவாரபாலகர் சிற்பங்களில் 'அபய ஹஸ்தம்' காணப்படுவதுண்டு. இது கருவறை வாயிலை நோக்கியுள்ள வலது அல்லது இடது கையில் அமைந்திருக்கும். கருவறையை நோக்கி சாய்ந்திருக்கும். இது உள்ளே இறைவன் உள்ளதை மரியாதையுடன் சுட்டிக்காட்டும் கை அமைதி எனக் கொள்ளலாம்
.

குரங்கணில்முட்டம் குடைவரை

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • https://www.wisdomlib.org
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து 







Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...