Skip to main content

கை அமைதிகள்- -11: கர்த்தரி முக, முஷ்டி ஹஸ்தங்கள்

ஆயுதங்களை ஏந்தும் ஹஸ்தங்களை கருவி ஹஸ்தங்கள் எனலாம்.  ஏழு கருவி ஹஸ்தங்களுள் நான்கு ஒரு வகை ஆயுதத்தை மட்டும் ஏந்துபவை. சிகர ஹஸ்தமும், தனுர் ஹஸ்தமும் வில்லை மட்டும் ஏந்துவன. டமரு ஹஸ்தம் டமருவையும், அர்த்த சந்திர ஹஸ்தம் தீயையும் நடராஜர் படிமங்களில் ஏந்துபவை. அவ்வாறின்றி பல்வகை ஆயுதங்களையும் ஏந்தும் கருவி ஹஸ்தங்கள் மூன்று: கடகம், கர்த்தரி முகம், முஷ்டி. கடக ஹஸ்தம் அதனுடன் மிக நெருங்கிய கருத்து ஹஸ்தமான சிம்மகர்ண ஹஸ்தத்துடன் சேர்த்து வேறொரு பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு கர்த்தரி முகமும், முஷ்டியும்.

கர்த்தரி முக ஹஸ்தம்

அமைதி
  • கையிலிருந்து நடு விரலும், சுட்டுவிரலும் நீண்டிருக்கும். 
  • நடு விரல் சற்று முன்னோக்கியும், சுட்டு விரல் சற்று பின்னோக்கியும் கத்தரி போன்று அமையும்.
  • அணிவிரலும், பெரு விரலும் வளைந்து உள்ளங்கையில் நெருங்கி அமையும். 
  • சிறு விரல் சிறிது வளைந்து இருக்கும். 
  • மேற்கைகளில் மேல் நோக்கி அமையும்.
கர்த்தரி முக ஹஸ்தம்

கருத்து

கர்த்தரி  = கத்தரி.
இது ஆயுதங்கள் ஏந்தும் ஒரு கருவி ஹஸ்தம்.

படிமங்கள்

திருமால், சிவன், பிரம்மா, துர்க்கை, முருகர் முதலிய பல தெய்வங்களின் சக்கரம், சங்கு, மழு, மான், அக்க மாலை, கமண்டலம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம் போன்ற ஆயுதங்களை ஏந்துவதாக கர்த்தரி முக ஹஸ்தம் உள்ளது.

கர்த்தரிமுக ஹஸ்தம்
துர்க்கை, கடாரம்கொண்டான், மயிலாடுதுறை மாவட்டம்
சென்னை அருங்காட்சியகம்


கர்த்தரி முக ஹஸ்தத்தில் சக்கரமும் சங்கும்
திருமால் - அரிஞ்சய சோளீஸ்வரம், மேல்பாடி

1. இந்த கர்த்தரிமுக ஹஸ்தத்தில் சிறு விரல் செங்குத்தாக நீண்டுள்ளது காண்க.

2. சக்கரம் பக்கவாட்டில் உள்ளது. எறியப்படுவதற்கு ஆயத்தமாக உள்ளதால் இது 'பிரயோக சக்கரம்' எனப்படும்.  இவ்வாறு ஆயுதம் பக்கவாடில் பிரயோக நிலையில் உள்ள நிலை  'பிரயோக முத்திரை' இல் உள்ளது எனப்படும் 

ரிஷபாந்திக சிவன்
இரு பின் கைகளில் கர்த்தரி முக ஹஸ்தம் - மழு, மான் ஏந்தி
(முன் வலதுகை - பல்லவ ஹஸ்தம்; முன் இடது கை - ஊரு ஹஸ்தம்)
ஆவுடையார் கோயில்

நான்முகன் 
வலது மேல் கை கர்த்தரி முக ஹஸ்தத்தில் அக்க மாலை
இடது கை க உடைந்துள்ளது
அரிஞ்சய சோழீஸ்வரம், மேல்பாடி


முருகன்
வலது மேல் கை கர்த்தரி முக ஹஸ்தத்தில் சக்தி ஆயுதம்
இடது கை கர்த்தரி முக ஹஸ்தத்தில் வஜ்ராயுதம் மறைந்துள்ளது
ஆவுடையார்கோயில்

(கர்த்தரி முக ஹஸ்தத்தில் சிறு விரல் செங்குத்தாக இருக்க, அணி விரல் நுனியும், பெருவிரல் நுனியும் தொட்டுக்கொண்டிருந்தால், அந்த அமைதி மயூர ஹஸ்தம்' எனப்படும்.

வேறுபாடு - ஹரிணி முத்திரை*

சிறுவிரல் வளைந்து இருப்பதற்கு பதிலாக செங்குத்தாக நிமிர்ந்து இருக்க பெருவிரலும் மோதிர விரலும் தொட்டுக் கொண்டிருந்தால் அது  ஹரிணி முத்திரை எனப்படும். ஹரிணி= மான்.

ஹரிணி ஹஸ்தம்
(நன்றி: BHU Swayam - Iconography of Major Hindu Deities)


முஷ்டி ஹஸ்தம்

அமைதி
  • கட்டை விரல் தவிர்த்த மற்ற நான்கு விரல்களை மடக்கி
  • உள்ளங்கையோடு சேர்த்து இறுக்கிப் பிடித்து
  • கட்டை விரலை நடு விரல் மீது பொருத்திய அமைதி.
முஷ்டி ஹஸ்தம்

குறிப்பு
  • இது ஒரு கருவி ஒற்றைக் கை அமைதி.
  • வாள், தண்டம், கேடயம் முதலியவற்றை இறுக பிடிக்கும் ஹஸ்தம்.
முஷ்டி ஹஸ்தம் 
பைரவர், சோமேஸ்வரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு

முஷ்டி ஹஸ்தங்கள் 
வீரபத்திரர், சோமேஸ்வரர் கோயில், ஹலசூரு, பெங்களூரு

முஷ்டி ஹஸ்தம்
பைரவர், செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

முஷ்டி ஹஸ்தம்
ஆவுடையார் கோயில்

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து 
  • * BHU Swayam - Iconography of Major Hindu Deities











Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...