Skip to main content

கை அமைதிகள் - 10: கடக ஹஸ்தமும் சிம்மகர்ண ஹஸ்தமும்

 கடக ஹஸ்தம்

அமைதி
  • கட்டை விரல் நீட்டப்பட்டு சற்று உள்புறமாக வளைந்திருக்கும்.
  • நடுவிரலும் அணிவிரலும் ஒன்றோடொன்று இணைந்து அவற்றின் மூன்று கணுக்களும் கீழ் முட்டில் முன்னோக்கி வளைந்திருக்கும்.
  • சுட்டுவிரலும், சுண்டு விரலும் அவற்றின் மேல் இரு கணுக்கள் மட்டும் இரண்டாம் முட்டில் சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும்.
  • நடுவிரல் நுனி அணிவிரல் நுனியை விட சற்று முன்னோக்கி இருக்கும்.
கடக முத்திரை

குறிப்பு
  • கடகம் = நண்டு. 
  • இது ஒரு கருவி ஒற்றை தொழிற்கை. 
  • கடக ஹஸ்தம் மலர், பாசம், அங்குசம், தண்டம், கத்தி, அம்பு முதலிய பல்வகை ஆயுதங்களை பிடிக்க பயன்படுகிறது.
  • ஏழு கருவி ஒற்றைத் தொழிற்கைகளுள் கடக ஹஸ்தம், கர்த்தரி முக ஹஸ்தம், முஷ்டி ஹஸ்தம் மூன்றும் இவ்வாறு பல்வகை ஆயுதங்களை ஏந்துபவை. சிகர ஹஸ்தம், தனுர் ஹஸ்தம் இரண்டும் வில் மட்டுமே ஏந்துபவை. டமரு ஹஸ்தம் டமருவையும், அர்த்த சந்திர ஹஸ்தம் தீயையும் நடராஜர் படிமங்களில் ஏந்துபவை. 



கடக ஹஸ்தம் - பிள்ளையார்
வலது மேல் கை கடக ஹஸ்தத்தில் அங்குசம்
இடது மேல் கை கடக ஹஸ்தத்தில் பாசம்
வலது முன் கடக ஹஸ்தத்தில் தந்தம்
ருத்திராட்ச மண்டபம், அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

செப்புப் படிமங்களில் கடக ஹஸ்தம்
  • கல் படிமங்களில் விரல்கள் ஒன்றோடொன்று ஒட்டியிருக்கும். செப்புப் படிமங்களில் அவை சற்று விலகியிருக்கும்.
  • கடக ஹஸ்தம் காட்டப்பட்டிருந்தாலும் அது ஏந்தும் மலர், வில், வீணை முதலிய ஆயுதங்கள் செப்புப் படிமங்களில் இருப்பதில்லை. அவற்றைத் தனியாக படிமங்களில் சேர்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக தேவி படிமங்களில் கடக ஹஸ்தம் இருக்கும், மலர் இருக்காது. உண்மையான பூவை அந்த கடக ஹஸ்தத்தில் சொருகி முழுமைப்படுத்த வேண்டும்.

செப்புப் படிமத்தில் கடக ஹஸ்தம் 
இதில் பூவைச் சொருகி முழுமை செய்ய வேண்டும்
பார்வதி, தஞ்சாவூர் அருங்காட்சியகம்
(நன்றி: Jean-Pierre Dalbéra from Paris, France, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons)


கருத்து ஹஸ்தமாக

சில படிமங்களில் கடக ஹஸ்தம் கருவியின்றி கருத்து ஹஸ்தமாக இருப்பது உண்டு. அப்போது அது பிடிப்பை உணர்த்தும்.

கடக ஹஸ்தம் - இடது முன்கை 
சிவன்- சுகாசனர்
12 ஆம் நூ சோழர் செப்புப் படிமம்
Nelson-Atkins Museum of Art, Kansas City, Missouri

(By Daderot - Own work, CC0
 1.0)

சிம்ம கர்ண ஹஸ்தம்

அமைதி

சிம்ம கர்ணம் = சிங்கக் காதுகள். 
சிம்ம கர்ண ஹஸ்தத்தின் அமைதி கடக ஹஸ்தத்தின் அமைதி போன்றதே. நடுவிரலும் அணி விரலும் எவ்வளவு மடங்கி உள்ளன என்ற ஒரு நுண்ணிய வேறுபாடுதான். 
  • சிம்மகர்ண ஹஸ்தத்தில் நடுவிரல் நுனி உள்ளங்கையை தொடுமளவுக்கு நடுவிரலும் அணி விரலும் நன்கு வளைந்திருக்கும். 
  • இதனால் சுட்டு விரலும் சுண்டு விரலும் பெயருக்கு ஏற்ப எடுப்பாகத் தெரியும்.
  • சுருங்கச் சொன்னால் நடுவிரல் நுனி உள்ளங்கையைத் தொட்டுக்கொண்டிருந்தால் சிம்மகர்ணம். விலகி இருந்தால் கடகம்.
கருத்து
  • சிம்ம கர்ண ஹஸ்தம் ஒரு கருத்து ஒற்றைத் தொழிற்கை.
  • அது வா என்ற அழைப்பை உணர்த்தும்.
கடகமா? சிம்ம கர்ணமா?

நடைமுறையில் குறிப்பாக கல் சிற்பங்களில் இரண்டையும் பிரித்தறிவது கடினம் என்று தோன்றுகிறது. கடக ஹஸ்தமும், சிம்ம கர்ணமும் ஒன்றே என்று கருதுவோரும் உண்டு. 

இரண்டையும் பிரித்தறிய சில குறிப்புகள்: சிம்ம கர்ண ஹஸ்தம் ஒரு கருத்துத் தொழிற் கை. ஆயுதம் ஏந்தாது. எனவே 
  • ஆயுதம் இருந்தால் அதை கடக ஹஸ்தம் என்று கொள்ளலாம்.
  • ஆயுதம் இல்லாவிட்டால் அது  சிம்மகர்ண ஹஸ்தமாயும் இருக்கலாம். கடக ஹஸ்தமாயும் இருக்கலாம். ஐயம் தீர்க்க குறிப்பிட்ட படிமத்தின் ஆகம, சிற்ப நூல் வர்ணனைகள் உதவக்கூடும்.

சிம்ம கர்ண ஹஸ்தம் 
சிங்கவரம் ரங்கநாதர் 
(நன்றி: தினமலர்)

நன்றிக்கடன்
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • South Indian images of Gods and Godesses; Krishna Sastri. H; Madras Governement Press; 1916
  • https://www.wisdomlib.org
  • மா மாரிராஜன்; சிற்ப இலக்கணத் தொடர்; மெய் எழுத்து 

Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...

கை அமைதிகள் - 14: இரட்டைக் கை அமைதிகள் நான்கு: அஞ்சலி, தியான, புஷ்பபுட, தர்ம சக்கர ஹஸ்தங்கள்

அஞ்சலி ஹஸ்தம் அமைதி இரண்டு கைகளிலும் ஐந்து விரல்களையும் நீட்டி  இரு கைகளையும் மார்புக்கு நேராக ஒன்றாக சேர்த்து வைத்து வணங்கும் கை அமைதி. கைகளுக்கு இடையே அக்க மாலை, பூ, பூ மாலை போன்றவை இருப்பதுண்டு. அஞ்சலி ஹஸ்தம் மாற்றுப் பெயர்கள் நமஸ்கார முத்திரை,  குறிப்பு அஞ்சலி ஹஸ்தம் வணங்குதலைக் குறிக்கும். படிமங்கள் புராண, வரலாற்று அடியவர்கள் அஞ்சலி ஹஸ்தம் அனுமன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் இலக்குவன், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் ரகுநாத நாயக்கர், ராமசாமி கோயில், கும்பகோணம் அஞ்சலி ஹஸ்தம் அதிகார நந்தி, உருத்திராட்ச மண்டபம் அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை புடைப்பு குறைந்த தாழ், இடை புடைப்புச் சிற்பங்களில் அஞ்சலி ஹஸ்தம் இவ்வாறு விரிந்து அமையலாம். தியான ஹஸ்தம் அமைதி அமர்ந்த கோலத்தில் இடது கையை உள்ளங்கை மேல் நோக்கும்படி மடியில் வைத்து வலது கையையும் அவ்வாறே இடது கை மீது படிய வைத்திருக்கும் கை அமைதி. இரு கைகளிலும் விரல்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நீண்டிருக்கும். இடது கை விரல்கள் வலது பக்கம் நோக்கியும், வல்து கை விரல்கள் இடது பக்கம் நோக்கியும் நீண்டிருக்கும் தியான ஹஸ்தம் க...