Skip to main content

பங்க இலக்கணம்

இந்திய சிற்பக் கலை மரபில் சிற்ப வடிவம் இயற்கையாக அமைக்கப்படுவதில்லை. அவை ஆடற்கலை பாணியில் உணர்ச்சிகளை, கருத்துகளை மொழியின்றி வெளிப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு ஏற்ப அமைகின்றன. இது இந்திய சிற்பக் கலை மரபின் சிறப்பியல்பு. இவ்விதத்தில் இந்திய சிற்பக்கலை மரபு மற்ற நாடுகளின் சிற்பக்கலை மரபுகளில் இருந்து வேறுபடுகிறது.

ஆடற்கலை இலக்கணங்களை நேரடியாகக் கொள்ளமல் படிமத்தின் தன்மை, கருத்துக்கேற்ப சிற்பக்கலை தன் இலக்கணங்களை வகுத்துக்கொண்டுள்ளது. அவற்றுள் ஆசனங்கள், உடல் பங்கங்கள், கை முத்திரைகள் முக்கியமானவை.

பங்கம்

படிமங்களின் உடல் ஒடிவு, வளைவுகளுக்கு பங்கம் என்று பெயர். பங்க அமைதி நின்ற நிலை படிமங்களுக்கே உரித்தானது. கல்லில் வடிப்பதைவிட உலோகங்களில் பங்கங்களை எளிதாகக் காட்ட முடியும். 

வகைப்பாடு

பங்கம் மூவகைப்படும்
  • ஆபங்கம் - குறைந்த ஒடிவு, வளைவு
  • சமபங்கம் - இடைப்பட்ட ஒடிவு, வளைவு
  • அதிபங்கம் - அதிகமான ஒடிவு, வளைவு
மூன்று பங்க அமைதிகளுமே மூன்று உடல் ஒடிவுகள் கொண்டிருப்பதால் அவை 'திரிபங்கம்' என்றும் அழைக்கப்படும்.

பங்க அமைதிகளின் கருத்து நிலை

சமபாத ஸ்தானகம் தலையும் உடலும் எப்பக்கமும் சாயாமல் நேராக நிமிர்ந்திருக்க, பாதங்கள் அருகருகே முன்நோக்கி இருக்க, நேர் நோக்குடையதாய் அமைந்த நிலை. இது தராசின் முள்போன்று ஒருபாற் கோடா இறைநிலையை உணர்த்தும்.

படிமத்தில் அமையும் பங்கம் உணர்வுகளை வெளிப்படுத்தும்.
  • ஆபங்கம் - அன்பும், அமைதியும் கூடிய சாத்வீக பாவம்
  • சமபங்கம் - சிருங்காரம், ராஜசம்
  • அதிபங்கம் - வீரம்
இறைவனின் எவ்வித அமைதியும் ஆத்மாவை தூய்மைப்படுத்தும் கருணையின் அடிப்படையில் அமைந்தது (பெருங்கருணைப் பேராறு - சிவ புராணம்). எனவே இம்மூன்று பங்கங்களிலும் முகம் அமைதியுடனும், கண்கள் கருணையுடனும், இதழ்கள் புன்முறுவலுடனும் அமையும்.

படிம உயரம்
  • படிம மானம் - சமபாத ஸ்தானகத்தில் உள்ள படிமத்தின் உயரம்
  • பங்க மானம் - பங்கத்துடனான படிமத்தின் உயரம். 'ஒடி மானம்', 'நத மானம்' என்றும் அழைக்கப்படும்.
1. பங்க மானம்.             2. படிம மானம்

பங்க மானம் படிம மானத்தைவிட குறைவாக இருக்கும். இந்த உயர வேறுபாடு விரலளவால் அளக்கப்படுகிறது.
  • ஆபங்கம் - 3 விரலளவு
  • சமபங்கம் - 4 விரலளவு
  • அதிபங்கம் - 5 விரலளவு
மைய நூலும் விலக்கமும்

சிற்பங்கள் செங்குத்தாக தொங்கும் மைய நூலை மையமாகக் கொண்டு அதன் இருபுறமும் உடலுறுப்புகள் அமையுமாறு உருவாக்கப்படுகின்றன. மைய நூல் சிற்பத்தின் முன்புறம் உள்ளதால் அது பூர்வ நூல் என்றும் அழைக்கப்படும். சமபாத ஸ்தானகத்தில் தலை முதல் பாதங்கள் வரை உடலின் நடுவில் மைய நூல் செல்லும். உடலுறுப்புகள் மைய நூலில் இருந்து சம தூரத்தில் அமையும்.

சமபாத ஸ்தானகத்தில் மைய நூல்.

பங்க அமைதிகளில் இந்த மைய நூலில் இருந்து தலை, மூக்கு, கழுத்து, மார்பு, நாபி (தொப்புள்), குய்யம் (1. குதம், ஆசனவாய்; 2. ஆண்/பெண் குறிகள்), கால்கள், பாதங்கள் ஆகிய உறுப்புகள் ஒரு பக்கத்தில் மற்ற பக்கத்தை விட அதிகமாக விலகி ஒடிவு, வளைவுகளைக் காட்டும். இது 'விலக்கம்' அல்லது 'ஒதுக்கம்' எனப்படும்.

 
ஆபங்கம் - திரிபுராந்தகர்

சமபங்கம் - தேவி


அதிபங்கம் - ரிஷபாந்திகர்

துணை பகுப்புகள்

விலக்கங்களின் இடங்கள் மற்றும் அளவுகளைக் கொண்டு மூன்று பங்கங்களையும் மேலும் வகைப்படுத்துகிறார் கணபதி ஸ்தபதியார். வெவ்வேறு வகைகள் வெவ்வேறு இறைவர்களுக்கு உரியனவாம். அவர் கீழ்கண்ட அனைத்து வகைகளையும் படங்களுடன் அளவுகளையும், அவை எந்த இறைவருக்கு உரியவை என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார். 
  • ஆபங்கம் - 9 வகைகள்
  • சமபங்கம் - 14 வகைகள்
  • அதிபங்கம் - 3 வகைகள்

மாற்றுக் கருத்துக்கள்

மேற்கூறிய இலக்கணங்கள் கணபதி ஸ்தபதியாரின் சிற்பச் செந்நூலில் விவரித்துள்ளவற்றின் சாரம். கலைச்செம்மல் கோ திருஞானம் தமது 'உருவக்கோடுகள்' என்னும் நூலில் இதையே பின்பற்றியுள்ளார்.

திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி தனது 'SOUTH-INDIAN IMAGES OF GODS AND GODDESSES'  என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:

"It may be noted that in all figures of gods and godddesses standing in any position, the ideal beauty is recognized to consist in the three bhangas (bends) which according to the Silpasangraha are abhanga (slight bend), samabhanga (medium bend) and atibhanga (great bend)."

நன்கறியப்பட்ட 'Elements of hindu iconography' நூலின் ஆசிரியர் டி, ஏ, கோபிநாத ராவ் சமபங்கம் என்பது சமபாத ஸ்தானகத்தில் காணப்படும் ஒடிவு, வளைவுகளற்ற நேர்நிலை என்ற கருத்தை உடையவராக உள்ளார். சமபங்கம்  ஒடிவு, வளைவுகளற்ற நேர்நிலை என்பது மட்டுமின்றி ஒடிவு வளைவுகள் இருப்பின் அவை இருபுறமும் சமமாக இருக்கும் நிலையும் சமபங்கமே என்பாரும் உண்டு. 

(நன்றி: How to See a Museum - Participant Handbook; Tamil Heritage Trust)

மேற்கண்ட படத்தில் 3, 4, 5 ஆம் படங்களை கவனித்தால் அவை நாட்டிய நிலைகள் என்பது புலப்படும். இது போன்ற நாட்டிய நிலைகள் மூன்று பங்க அமைவுகளுக்கும், ஐந்து திருக்கோல அமைவுகளுக்கும் அப்பாற்பட்டவை. நடராஜ படிமமும் அவ்வாறே. இவ்வகை நாட்டிய கோலங்கள் ஆபாச பங்கம் என்று வகைப்படுத்தப்படுகின்றன. 

கணபதி ஸ்தபதியார் அனைத்து பங்க அமைதிகளும் திரிபங்கமே என்பதற்கும் மாற்று கருத்து உள்ளது. 
  • துவிபங்கம் - இடையில் மட்டும் ஒடிவு, மற்ற உடல் பகுதிகள் நேர்நிலையில்.
  • திரிபங்கம் - இடையில் ஒரு ஒடிவு - (இடுப்பு ஒரு பக்கம் உயர்ந்து உடல் மறு பக்கம் சாய்ந்திருக்க), கழுத்தில் இன்னொரு ஒடிவு (தலை உயர்ந்த இடுப்பின் பக்கம் வளைந்திருப்பது).

நன்றிக்கடன்:
  • கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; தொழில் நுட்பக் கல்விக் கழகம்; மூன்றாம் வெளியீடு; 2001
  • H. KRISHNA SASTRI, Assistant Archceological Superintendent for Epigraphy-, Southern Circle; 'SOUTH-INDIAN IMAGES OF GODS AND GODDESSES'; Madras Government Press; 1916
  • Gopinatha Rao, T. A.; Elements of hindu iconography; Motilal Banarasidas Publishers Pvt Ltd; 1914 Reprint 1997.
  • கோ. திருஞானம்; உருவக்கோடுகள்; 1998
  • How to See a Museum - Participant Handbook; Tamil Heritage Trust

Comments

Popular posts from this blog

கை அமைதிகள் 1: அறிமுகம்

கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் ' ஹஸ்தங்கள்'  என்னும் கை அமைதிகளைபடங்களுடன் விளக்கும் முயற்சி இது.  கை விரல்களை 'நீட்டுதல், மடக்குதல், கூட்டுதல், விலக்குதல், குவித்தல்' ஆகிய ஐந்து நிலைகளின் அடிப்படையில், கை அமைதிகளை ஒரு பொருளை அல்லது கருத்தைச் சுட்டும் குறியீடுகளாக ஆடற் கலையில் வரையறுத்துள்ளனர். ஆடற் கலையின் இந்தக் கை அமைதிகள் 'முத்திரைகள் அல்லது பிடிகள்' எனப்படும். சிற்பக்கலையில் இந்தக் கை அமைதிகள் சில மாற்றங்களோடும், பெயர் வேறுபாடுகளோடும் வழங்கி வருகின்றன. சிற்பக் கலையில் கை அமைதி 'ஹஸ்தம்' எனப்படுகிறது.  வகைப்பாடு கை அமைதிகளின் வகைப்பாடு கை அமைதிகள் இரு வகைப்படும் தொழிற் கைகள் - ஆயுதங்கள் முதலிய கருவிகளை ஏந்தியோ அல்லது கருவிகள் ஏதும் இன்றி ஒரு கருத்தை சுட்டியோ அமையும் கைகள். எழிற் கைகள் - எந்த கருவியும் இல்லாமல், எந்த கருத்தையும் குறிக்காமல் சிற்பத்தின் சமநிலைக்காகவும் எழிலுக்காகவும் அமையும் கைகள். தொழிற் கைகள் இருவகைப்படும்...

திருக்கோலங்கள் (ஆசனங்கள்)

ஆடற்கலை, யோகம், மக்களின் வாழ்வில் காணப்படும் இயல்பான அமைதிகள் இவற்றில் உள்ள கூறுகளைத் தொகுத்து தன் தேவைக்கேற்ப இலக்கணம் வகுத்து வகைமைப் படுத்திக் கொண்டது சிற்பக்கலை. தெரிந்ததன் மூலம் தெரியாததை விளக்கும் முயற்சி. கணபதி ஸ்தபதியாரின் 'சிற்பச் செந்நூல்' சிற்பக் கலையின் அடிப்படை இலக்கணங்களை விளக்கும் இக்காலத்தின் முதன்மை நூலாகத் திகழ்கிறது. அதன் அடிப்படையில் திருக்கோலம் என்னும் ஆசனங்களை படங்களுடன் விளக்கும் முயற்சி இது. அவர் குறிப்பிட்டிற்கும் வகைமைகளுக்குள் துணை வகைமைகளை உருவாக்கி திருக்கோலங்கள் வரிசைப் படுத்தப்படுள்ளன. திருக்கோலம் என்பது படிமங்களின் உடல் அமைதியைக் குறிக்கும். குறிப்பாக கால் அமைதிகளைக் குறிக்கும், 'ஹஸ்தம்' கை அமைதியைக் குறிப்பது போல.  வடமொழியில் திருக்கோலம் ' ஆசனம்' எனப்படும்.  'ஆசனம்' என்னும் சொல் பொதுவாக அமர்ந்த கோலத்தைக் குறிக்கும். அதே சமயம் சிற்பக்கலைச் சொல்லாக 'கோலம்' (தோன்றும் நிலை) என்றும் பொருள் தரும். 'ஆசனம்' இருக்கை, பீடம் என்றும் பொருள் தரும். எனவே 'ஆசனம்' என்ற சொல்லுக்கு சிற்பக் கலையில் மூன்று பொருள்கள் உ...

சிற்ப வகைகள்

சிற்ப வகைகள் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். முழு உருவச் சிற்பம் (சித்திரம்)  - எல்லா உறுப்புகளும் முழுமையாகவும், உரிய  அளவு அமைப்புடனும் அமைந்து உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பங்கள் இவை.  கீழ் பக்கத்தை தவிர மற்ற பக்கங்கள் எதையும் சாராமல் தனித்து நிற்கும் தன்மை உடையவை. உலோகப்படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.  'பூர்ண சித்திரம்'  என்றும் பெயருண்டு. அர்த்தநாரி சென்னை அருங்காட்சியகம் நன்றி: Sailko, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) புடைப்புச் சிற்பம் (சித்ரார்த்தம்)  -  முற்பகுதி உறுப்புகள் மட்டும் அமைக்கப்பட்டு பின் பகுதி உறுப்புகள் இல்லாத சிற்பம். சுவர், விதானம், பாறை, தரை ஆகியவற்றில் இருந்து வெளியே புடைத்துக் கொண்டிருக்கும். ( சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் முதலியவற்றின் மீது புடைப்பின்றி வரையப்படும் ஓவியம்  ' சித்ராபாசம்'  எனப்படும்   . படம் என்றும்...